கர்நாடகம் மாநிலம் மங்களூரு அருகே உள்ள மூடுஷெட்டே கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தாய்–மகள் இடையே ஏற்பட்ட சண்டை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தட்சிண கன்னடா மாவட்டம் சிவநகர் பகுதியை சேர்ந்த மூதாட்டி மற்றும் அவரது மகள் இடையே குடும்பத் தகராறு நீண்டநாட்களாக இருந்து வந்ததாகத் தெரியவந்துள்ளது. இதுகுறித்து முன்பும் காவூர் போலீசில் மூதாட்டி புகார் அளித்த நிலையில், போலீசார் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பியிருந்தனர்.
சமீபத்தில் மீண்டும் மகளின் நடத்தை குறித்து புகார் அளிக்க மூதாட்டி கிராம பஞ்சாயத்து அலுவலகத்துக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனைக் கேட்டவுடன் அங்கு வந்த மகள், தாயுடன் வாக்குவாதம் செய்து, அலுவலகத்திலிருந்து வெளியே இழுத்து வருவதோடு, காலால் தள்ளி மிதித்தும், தன்னுடைய செருப்பை கழற்றி அடித்தும் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
A Daughter beats her elderly mother in broad daylight outside #Moodushedde Panchayat in #Mangalore. But the bigger tragedy? People stood around, watched, filmed… and did NOTHING. If we can’t protect a helpless mother, what humanity do we have left ?#Mangaluru #HumanityDies pic.twitter.com/eVeaM5RvCJ
— Headline Karnataka (@hknewsonline) November 29, 2025
அங்கிருந்தவர்கள் தலையிட்டு மூதாட்டியை மீட்டதுடன் இருவரையும் சமாதானப்படுத்தினர். லேசான காயம் ஏற்பட்ட மூதாட்டிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த மோதல் காட்சி ஒருவரால் படம் பிடித்து சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டதால் காணொளி வைரலாகி, பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த சம்பவத்துக்கான வழக்கு இதுவரை பதிவு செய்யப்படவில்லை என்றாலும், புகார் அளிக்கப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மங்களூரு நகர போலீஸ் கமிஷனர் சுதீர்குமார் ரெட்டி தெரிவித்துள்ளார். மேலும், தாக்குதல் காட்சியைப் பரப்பிய நபர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
