சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள வில்லியரேந்தல் கிராமத்தில் அமைந்துள்ள ஊர்க்காவலன் சுவாமி கோயிலில், உண்டியலை உடைத்துத் திருட முயன்ற நபரை கிராம மக்கள் கையும் களவுமாகப் பிடித்தனர். மதுரை-பரமக்குடி நான்கு வழிச்சாலையில் அமைந்துள்ள இந்தக் கோயிலில் ஏற்கனவே மூன்று முறை கொள்ளைச் சம்பவங்கள் நடந்திருந்ததால், சிசிடிவி கேமராக்கள் மற்றும் அலாரம் பொருத்தப்பட்டிருந்தன.

மேலும் நேற்று நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் கோயிலின் சுவரை ஏறி குதித்து உண்டியலை உடைக்க முயன்றபோது, அலாரம் ஒலித்ததால் விழிப்புடன் இருந்த மக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மதுரையைச் சேர்ந்த மூர்த்தி என்பவரை மடக்கிப் பிடித்தனர் அவருடன் வந்த மற்றொருவர் தப்பி ஓடிவிட்டார். பிடிபட்ட நபரை கிராம மக்கள் அங்கிருந்த மின்கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்து, பின்னர் திருப்புவனம் காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இதனால் அந்த உண்டியலில் சுமார் ஒரு லட்சம் ரூபாய் வரை காணிக்கை பணம் இருந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. பிடிபட்ட நபர் மதுரையின் ஜெய்ஹிந்த்புரம் பகுதியைச் சேர்ந்தவர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.