திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அன்னதான மண்டபத்தின் மேல்தளத்தில், சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த மண்டபத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அங்குள்ள ஜன்னல் கம்பியில் தனது வேஷ்டியாலேயே அவர் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது.

இது குறித்து தகவல் அறிந்த கோவில் கண்காணிப்பாளர் ராமமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டனர். உயிரிழந்தவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த நபர் யார், அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் அல்லது எதற்காக இந்த முடிவை எடுத்தார் என்பது குறித்த விவரங்கள் இன்னும் தெரியவில்லை.

இது தொடர்பாக திருச்செந்தூர் கோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, அந்த நபரின் அடையாளத்தைக் கண்டறியத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.