அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான புதிய விசா நடைமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் இந்தியர்களுக்கு ஏற்கனவே கலக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், இப்போது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவரின் செயல் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள புகழ்பெற்ற இரண்டாம் உலகப்போர் நினைவிடத்தில் (WWII Memorial), இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மது ராஜு என்பவர் ஒரு பெண்ணுடன் சேர்ந்து டிக் டாக் நடனம் ஆடி வீடியோ எடுத்துள்ளார்.

சுமார் 1.6 கோடி அமெரிக்க வீரர்களின் சேவை மற்றும் 4 லட்சம் பேரின் தியாகத்தைப் போற்றும் இந்த புனிதமான இடத்தில், இப்படி விளையாட்டுத்தனமாக நடந்துகொண்டது அமெரிக்கர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலானதை அடுத்து, மது ராஜுவின் விசா விவரங்கள் மற்றும் அவர் நடத்தி வரும் டான்ஸ் ஸ்டுடியோ குறித்த தகவல்களை நெட்டிசன்கள் அம்பலப்படுத்தினர்.

இதனால் ஏற்பட்ட அழுத்தத்தால் அவர் தனது சமூக வலைதளப் பக்கங்களை முடக்கியுள்ளார். தற்போது இந்த விவகாரம் அமெரிக்கக் குடியேற்ற அதிகாரிகளின் கவனத்திற்குச் சென்றுள்ளதால், விதிமுறைகளை மீறியதற்காக அவரது விசா ரத்து செய்யப்பட்டு, அவர் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் அபாயம் உருவாகியுள்ளது.

அமெரிக்கர்கள் மட்டுமின்றி, இந்திய நெட்டிசன்களும் “இதுபோன்ற ஒரு சிலரின் செயலால் ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது” என அவரை கடுமையாகச் சாடி வருகின்றனர்.