தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் நாளுக்கு நாள் அனல் பறந்து வரும் நிலையில், ஆளும் கட்சியான திமுக தனது தேர்தல் அறிக்கையை நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை அதிகாரப்பூர்வமாக வெளியிட உள்ளது.

ஏற்கனவே அதிமுக தனது 297 வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதற்குப் போட்டியாக திமுக-வின் இந்த அறிக்கை அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, கடந்த தேர்தலைப் போலவே இந்த முறையும் “தேர்தல் அறிக்கையே தேர்தலின் ஹீரோ” எனச் சொல்லும் வகையில், பொதுமக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையில் பல கவர்ச்சிகரமான திட்டங்கள் இதில் இடம்பெற வாய்ப்புள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பினரிடம் கருத்துகளைக் கேட்டுத் தயார் செய்யப்பட்டுள்ள இந்த அறிக்கையில், பெண்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகளுக்கான சிறப்புத் திட்டங்கள் அதிகளவில் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

ஏற்கனவே இன்று (சனிக்கிழமை) வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுத் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாளை தேர்தல் அறிக்கையையும் வெளியிடுவது அக்கட்சியினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திமுக-வின் இந்த ‘மெகா’ திட்டங்கள் என்னென்ன? எதற்கெல்லாம் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது? என்பது நாளை மாலை தெரிந்துவிடும்.