தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில் இருந்து வெளியேற நேரிடும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த திருமாவளவன் கூறியதாவது: தேர்தலை விட விசிக-வுக்கு கொள்கை ரீதியான நம்பிக்கையும்தான் முக்கியம். பாஜக மற்றும் பாமக ஆகிய இரண்டு கட்சிகளுமே பிளவுவாத அரசியலை முன்னெடுக்கின்றன. தற்போதைய சூழலில், ஒருவேளை திமுக கூட்டணிக்குள் ராமதாஸ் (பாமக) வந்தால், விசிக கூட்டணியை விட்டு உடனடியாக வெளியேறும். எங்கள் முடிவில் எந்த சமரசமும் கிடையாது”.
கூட்டணி குறித்து திருமாவளவன் வெளியிட்டுள்ள இந்த அதிரடி கருத்து தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பாமக தரப்பில் அன்புமணி அதிமுக கூட்டணியில் இணைந்ததால் ராமதாஸ் திமுக கூட்டணியில் இணைவதற்கான நகர்வுகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படும் நிலையில் தற்போது பாமக வந்தால் தாங்கள் வெளியேறுவோம் என திருமாவளவன் அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
