“திமுக இன்று நவீன ரக ஒட்டுண்ணிகளின் கொள்ளிடமாக மாறிவருகிறது. கட்சிக்கு காலம் காலமாக உழைத்தவர்கள் கசக்கி எறியப்படுகிறார்கள்” எனப் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் நடைபெற்ற தவெக நிகழ்ச்சியில் நாஞ்சில் சம்பத் விமர்சித்துள்ளார்.
தவெக நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது, “கட்சிக்காக உழைத்தவர்களை ஒதுக்கிவிட்டு, எங்கிருந்தோ வந்தவர்களுக்கு மகுடம் சூட்டப்படுகிறது. இத்தனை பேரை திமுகவில் சேர்த்துக்கொண்டு என்ன பயன்? திமுகவை ‘அதிமுக-2’ என்று மாற்றிக்கொள்ளுங்கள். திமுக ஒரு அதிமுகவாகவே மாறிவிட்டது.”
“தமிழ்நாட்டு மக்களுக்கு கடைசி நம்பிக்கையாக தவெக தலைவர் விஜய் மட்டுமே உள்ளார். அவரால் மட்டுமே அரசியல் சீர்த்திருத்தத்தைக் கொண்டுவர முடியும். தற்போது அரசாங்கம் போடும் உத்தரவை விட, விஜய் போடும் உத்தரவுக்குத்தான் மக்களிடம் அதிக மதிப்பு உள்ளது.”
“கச்சத்தீவு விவகாரத்தில் வைகோ, மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பேசி வருகின்றனர். ஆனால், விஜய் பேசியதற்கு இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சரே பதில் கேட்கிறார். என் தலைவன் ஒரு பேச்சு பேசினால் இலங்கையில் கூட பூகம்பம் ஏற்படுகிறது.
“தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் முதல்முறையாக, ராணி வேலுநாச்சியாரைக் கொள்கைத் தலைவராகக் கொண்டவர் விஜய். அவர் பேசிய பின்புதான் அனைவருக்கும் அவரைப் பற்றித் தெரிகிறது. அதன்பிறகே முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரையில் மேம்பாலத்திற்கு வேலுநாச்சியார் பெயர் சூட்டியுள்ளார்”என்றார்.
