தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், காலியாகும் 6 மாநிலங்களவை இடங்களைக் கைப்பற்றக் கூட்டணிக் கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் தலா ஒரு இடத்தைக் கோருவதால், பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக தொகுதிப் பங்கீட்டில் சிக்கலைச் சந்தித்து வருகின்றன.
தமிழகத்தைச் சேர்ந்த மாநிலங்களவை எம்பிக்கள் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர். இளங்கோ, டாக்டர் கனிமொழி சோமு (திமுக), தம்பிதுரை (அதிமுக) மற்றும் ஜி.கே.வாசன் (தமாகா) ஆகியோரின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதத்துடன் நிறைவடைகிறது. தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்களின் பலத்தின் அடிப்படையில், திமுக 4 இடங்களையும், அதிமுக 2 இடங்களையும் எளிதாகக் கைப்பற்ற முடியும்.
அதிமுகவுக்குக் கிடைக்கக்கூடிய 2 இடங்களில், ஒன்று ஏற்கனவே பாமக தலைவர் அன்புமணிக்கு உறுதி அளிக்கப்பட்டதாகத் தெரிகிறது. மீதமுள்ள ஒரு இடத்திற்குத் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் டி.டி.வி. தினகரன் ஆகியோர் முட்டி மோதுகின்றனர். இதற்கிடையே, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவும் ஒரு இடத்தை ஒதுக்கினால் மட்டுமே கூட்டணி என நிபந்தனை விதித்துள்ளதால், எடப்பாடி பழனிசாமி தரப்பு குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது.
திமுக வசம் உள்ள 4 இடங்களுக்கு ஏற்கனவே கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மற்றும் விசிக ஆகியவை குறிவைத்துள்ளன. மற்றொருபுறம், ராமதாஸ் அல்லது பிரேமலதா ஆகியோரைத் தங்கள் அணிக்கு இழுக்க ஒரு மாநிலங்களவை இடத்தைக் ‘கைமாறாக’ வழங்கவும் திமுக தலைமை ஆலோசித்து வருகிறது. சட்டமன்றத் தேர்தல் தொகுதிப் பங்கீட்டுடன் இந்த மாநிலங்களவை பதவியும் இணைத்துப் பேசப்படுவதால், யாரைத் திருப்திப்படுத்துவது, யாரைத் தவிர்ப்பது எனத் தெரியாமல் திமுக தலைமை தவித்து வருகிறது.
மாநிலங்களவைத் தேர்தல் இடப்பங்கீடு, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் கூட்டணியைத் தீர்மானிக்கும் முக்கிய காரணியாக மாறியுள்ளதால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
