தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஓ.பன்னீர்செல்வத்துடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறுகிறதா என்ற கேள்விக்குப் பதிலளிக்கையில், கூட்டணி குறித்த விவரங்களை முன்கூட்டியே பகிரங்கமாக வெளியிட்டால் டெல்லியிலிருந்து நெருக்கடிகள் வருவதாகக் குறிப்பிட்டார்.

தங்களுக்கு உள்ள நடைமுறைச் சிக்கல்களைத் தாங்களே அறிவோம் என்றும், யாருடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என்பதை இப்போதைக்கு ரகசியமாக வைத்திருப்பதே அரசியல் ரீதியாகச் சரியான முடிவாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், டி.டி.வி. தினகரன் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்திருப்பது அவரது அரசியல் சூழ்நிலை சார்ந்த முடிவாக இருக்கலாம் எனக் கருத்து தெரிவித்தார். மேலும், பாமக நிறுவனர் ராமதாசுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், கூட்டணி விவகாரங்களில் இறுதியில் நல்லதே நடக்கட்டும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.