இலங்கை ‘ஏ’ அணிக்கு எதிரான திரில்லான சூப்பர் ஓவர் போட்டியில் இந்திய ‘ஏ’ அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த ஆட்டத்தின் போது நடுவர் வழங்கிய ஒரு ‘நோ பால்’ (No-Ball) முடிவு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. மேலும், சூப்பர் ஓவரின் போது இலங்கை பேட்ஸ்மேன்கள் மைதானத்திற்குள் வர தேவையின்றி தாமதம் செய்ததால் இந்திய வீரர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். போட்டி முடிந்த பிறகு, மைதானத்தை விட்டு வெளியேறிய இந்திய வீரர்களை இலங்கை வீரர்கள் வம்பிழுத்துக் கேலி செய்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த வைபவ் சூர்யவன்ஷியை, இலங்கை பந்துவீச்சாளர் ஒருவர் ஆக்ரோஷமாக தள்ளி விட்டார். இதுவே இரு தரப்புக்கும் இடையே பெரிய தள்ளுமுள்ளாக மாறி, அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.
இந்த விவகாரம் குறித்து இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது ‘X’ பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவர், “ஐபிஎல் போட்டிகளில் இருப்பது போன்ற துல்லியமான கேமராக்கள் இந்த தொடரில் இல்லை. சூப்பர் ஓவரில் நடுவர் கொடுத்த ‘நோ பால்’ முடிவு சர்ச்சைக்குரியது. அதேபோல், இலங்கை பேட்ஸ்மேன்கள் வேண்டுமென்றே மைதானத்திற்கு வர தாமதம் செய்ததால் இந்திய வீரர்கள் கோபமடைந்தது நியாயமானதுதான். இலங்கை அணி மிகச்சரியான ‘மைண்ட் கேம்’ (மனரீதியான ஆட்டம்) ஆடி, நாடகத்தை அரங்கேற்றியுள்ளது” என்று இந்திய அணிக்கு ஆதரவாகப் பேசியுள்ளார். போட்டிக்கு முன்பாக சூப்பர் ஓவர் கிடையாது என்று கூறப்பட்ட நிலையில், கேப்டன் திலக் வர்மா நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பிறகே சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது என்ற கூடுதல் தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.
