திமுக சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி தன்னைத் தேவையில்லாமல் விமர்சிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும், கூட்டணி தர்மம் கருதியே தாங்கள் அமைதி காப்பதாகவும் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “திமுக சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி தேவையில்லாமல் என்னை வம்புக்கு இழுக்கக் கூடாது. நீங்கள் மதுரையில் இருக்கிறீர்கள், நான் கரூரில் இருக்கிறேன். என்னைப் பற்றிப் பேச வேண்டிய அவசியம் உங்களுக்கு என்ன இருக்கிறது? காங்கிரஸ் கட்சியில் யார் போட்டியிட வேண்டும் என்பதை எங்கள் தலைவர் ராகுல் காந்தி முடிவு செய்வார். அது குறித்து உங்களிடம் யாரும் ஆலோசனை கேட்கவில்லை.”
மேலும், காங்கிரஸ் கட்சியைத் தொடர்ந்து பொதுவெளியில் அவமதிப்பதை வேடிக்கை பார்க்க மாட்டோம் என எச்சரித்துள்ள அவர், “களத்தில் செயல்படுவதில் பல நெருக்கடிகள் இருந்தபோதும், கூட்டணி தர்மம் கருதியும், முதல்வர் அண்ணனுக்காகவும்தான் நாங்கள் அனுசரித்துப் போகிறோம். கண்ணியம் கருதி இதுவரை நான் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் கூட உரிய இடத்தில்தான் பேசி வருகிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
வயதிலும் அனுபவத்திலும் மூத்தவரான கோ.தளபதி அதே கண்ணியத்தைக் கடைபிடிப்பது நல்லது என்று கூறியுள்ள ஜோதிமணி, “தமிழகத்தில் ‘இந்தியா’ கூட்டணியின் தலைவராகப் பொறுப்புடன் செயல்படும் முதலமைச்சரைத் தர்மசங்கடத்திற்கு உள்ளாக்காமல் அரசியல் செய்யுங்கள். அதுதான் அனைவருக்கும் நல்லது,” எனத் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார். மேலும் கூட்டணி கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள இந்த மோதல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
