நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்துக்கு உடனடியாக தணிக்கைச் சான்றிதழ் வழங்கக் கோரி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றத்தின் அமர்வு ரத்து செய்துள்ளது.
கே.வி.என். புரொடக்ஷன் தயாரிப்பில் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘ஜனநாயகன்’. இந்தப் படத்தைத் தணிக்கை செய்த தணிக்கை வாரியக் குழுவினர், அதில் மதம் மற்றும் பாதுகாப்புப் படை தொடர்பான சில காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டனர். இதனால், படத்தை மறுஆய்வுக் குழுவின் பரிசீலனைக்குப் பரிந்துரை செய்தனர்.
இதை எதிர்த்துத் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த தனி நீதிபதி பி.டி.ஆஷா, தணிக்கை வாரியத்தின் பரிந்துரையை ரத்து செய்ததோடு, படத்துக்கு உடனடியாக சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார்.
தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்துத் தணிக்கை வாரியம் சார்பில் உடனடியாக மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு விசாரித்தது.
கடந்த 20-ஆம் தேதி வழக்கின் வாதங்கள் முடிவடைந்த நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், “தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு செல்லாது” எனக்கூறி அதனை ரத்து செய்தனர்.
மேலும் இந்த வழக்கை மீண்டும் தனிநீதிபதி விசாரிக்கவே சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு வழங்கிய நிலையில் தணிக்கை வாரியம் மறு ஆய்வு செய்யலாம் எனவும் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இதன் மூலம், தணிக்கை வாரியத்தின் நடைமுறைகளில் நீதிமன்றம் உடனடியாகத் தலையிட முடியாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. படத்தின் வெளியீடு குறித்துத் தயாரிப்பு நிறுவனம் அடுத்தகட்டமாக என்ன முடிவெடுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு விஜய் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
