தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் திண்டுக்கல் மாவட்டத்தின் 7 தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றுவதுடன், தமிழகத்தில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்” என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல்லில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த அவர் மேலும் கூறியதாவது:
தேர்தல் நெருங்குவதால் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெண்களுக்காகப் பல திட்டங்களைக் கொண்டு வந்ததாகக் கூறி நாடகமாடுகிறார். மகளிர் உரிமைத் தொகையாக ரூ. 1,000 வழங்கிவிட்டு, அத்தியாவசியப் பொருட்களின் விலையைத் தாறுமாறாக உயர்த்தி மக்களின் சுமையை அதிகரித்துள்ளது இந்த அரசு.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி இடைநிலை ஆசிரியர்கள் இன்றும் போராடி வருகின்றனர். அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் ஏமாற்றியுள்ள திமுக அரசு, அவர்களின் ஒட்டுமொத்த ஆதரவையும் இழந்துவிட்டது.

அதிமுகவின் தேர்தல் அறிக்கையை விமர்சிக்கும் கனிமொழி, எங்களது திட்டங்கள் மக்களைச் சென்றடையாது என்கிறார். திமுக அரசு கொடுக்கும் ரூ. 1,000 மக்களைச் சென்றடையும் போது, அதிமுக பொதுச்செயலாளர் அறிவித்துள்ள ரூ. 2,000 மக்களைச் சென்றடையாதா? என அவர் கேள்வி எழுப்பினார்.

ஆளும் கட்சியும், ஆண்ட கட்சியும் ஊழல்வாதிகள் என்று தவெக தலைவர் விஜய் கூறுகிறார். ஆனால், தனது படங்களுக்குத் திரையரங்குகளில் கள்ளத்தனமாக டிக்கெட் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்காத விஜய், இப்போது தனக்குப் பணம் தேவையில்லை எனக் கூறுவது வேடிக்கையாக உள்ளது.

முறையாக வருமான வரி செலுத்தாத காரணத்தால் அவருக்கு ரூ. 1.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுவே அவர் ஒரு ஊழல் பேர்வழி என்பதைத் தெளிவாக்குகிறது. ஊழல் பேர்வழியாக இருந்துகொண்டு ஊழலைப் பற்றிப் பேசுவது சிரிப்பையே வரவழைக்கிறது. அதேபோல் ஆதவ் அர்ஜுனா போன்றவர்கள் ஊழலைப் பற்றிப் பேசுவது முரண்பாடாக உள்ளது என திண்டுக்கல் சீனிவாசன் சாடினார்.