நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்குவது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
கே.வி.என். புரொடக்ஷன் தயாரிப்பில் விஜய் நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்று கோரி விண்ணப்பிக்கப்பட்டது. படத்தை ஆய்வு செய்த தணிக்கை வாரியம், மதம் மற்றும் பாதுகாப்புப் படை தொடர்பான சில காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறி, இதனை மறுஆய்வுக் குழுவின் பரிசீலனைக்குப் பரிந்துரைத்தது. தணிக்கை வாரியத்தின் இந்த முடிவை எதிர்த்து தயாரிப்பு நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி பி.டி.ஆஷா, தணிக்கை வாரியத்தின் பரிந்துரை செல்லாது என்றும், படத்திற்கு உடனடியாகச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இதனை எதிர்த்து தணிக்கை வாரியம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, வழக்கின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தது.
இந்நிலையில், இன்று காலை இத்தீர்ப்பு வெளியாகியுள்ளது. மேலும் அதன்படி நடிகர் விஜயின் ஜனநாயகன்படத்தில் மத உணர்வுகளை தூண்டும் காட்சிகள் இருப்பதால் CBFC மறு ஆய்வுக்கு படத்தை அனுப்ப வேண்டும் என நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர். அதன்பிறகு தனி நீதிபதி சென்சார் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கிய நிலையில் அதனையும் நீதிபதிகள் ரத்து செய்தனர். மேலும் இந்த தீர்ப்பினால் ஜனநாயகன் ரிலீஸ் மேலும் தள்ளி போகும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
