மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தின் பெயரை மாற்றிய மத்திய அரசைக் கண்டித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் திருச்சியில் பிரம்மாண்ட பாதயாத்திரை மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
திருச்சி மரக்கடை பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை கலந்து கொண்டு பேசியதாவது, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்தைப் புறக்கணித்து வஞ்சித்து வருகிறது. அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு ஒரு பைசா கூட ஒதுக்கப்படவில்லை. தமிழகம் போன்ற பா.ஜ.க. ஆளாத மாநிலங்களில் இருந்து வசூலிக்கப்படும் ஜி.எஸ்.டி. வரி வருவாயை, அவர்கள் ஆளும் உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு வாரி வழங்குகிறார்கள்.
தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் இருந்து தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பெயரை மத்திய அரசு நீக்கியுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. நாளை ரூபாய் நோட்டில் இருக்கும் காந்தி படத்தை கூட அவர்கள் நீக்கக்கூடும். காந்தியின் பெயரை மீண்டும் சூட்டும் வரை எங்களது போராட்டம் ஓயாது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் 13 மாதங்கள் போராடி வெற்றி பெற்றது போல, இதற்காக நாடு தழுவிய போராட்டத்தை காங்கிரஸ் முன்னெடுக்கும்.
தமிழகத்தை பா.ஜ.க-வினால் ஒருபோதும் ஆள முடியாது. திருச்சி மலைக்கோட்டை மாநகரில் இருந்து சென்னை புனித ஜார்ஜ் கோட்டையைக் கைப்பற்றுவோம் என சபதமேற்கிறோம்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் சுமூகமாக உள்ளது. தொகுதிப் பங்கீடு மற்றும் ஆட்சியில் பங்கு குறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைமைதான் இறுதி முடிவு எடுக்கும். அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்பதே எங்களது விருப்பம். எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் அளவிற்கு தி.மு.க. தலைவருக்குப் பெரிய மனது உள்ளது.
பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் தன்னைத் தாக்க முயன்றதாக உண்மைக்கு புறம்பான தகவலைக் கூறி வருகிறார். ஒரு நாட்டின் பிரதமர் இவ்வாறு பேசுவது வருத்தத்திற்குரியது. பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணியைத் தமிழக மக்கள் புறக்கணிப்பார்கள் என்பது உறுதி என்றார்.
