தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (NCP-SP) மூத்த தலைவரும், இந்திய அரசியலின் தவிர்க்க முடியாத சக்தியுமான சரத் பவார், இன்று (பிப். 09) மதியம் மூச்சுத்திணறல் மற்றும் கடுமையான இருமல் காரணமாக புனேவில் உள்ள ரூபி ஹால் கிளினிக் (Ruby Hall Clinic) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாகவே சளி மற்றும் தொண்டை வலியால் அவதிப்பட்டு வந்த அவருக்கு, இன்று திடீரென சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதால் பாராமதியிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் புனேவுக்கு அழைத்து வரப்பட்டார். அவருடன் அவரது மகள் சுப்ரியா சூலே மற்றும் குடும்பத்தினர் மருத்துவமனையில் உள்ளனர்.
பரிசோதனை செய்த மருத்துவர்கள், சரத் பவாருக்குக் கடுமையான தொண்டை தொற்று (Throat Infection) மற்றும் நெஞ்சு சளி இருப்பதை உறுதி செய்துள்ளனர். ஏற்கனவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்தவர் என்பதால், அவருக்குச் சிறப்பு மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். சமீபத்தில் அவரது அண்ணன் மகன் அஜித் பவார் விமான விபத்தில் உயிரிழந்தது சரத் பவாருக்குப் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியிருந்த நிலையில், இப்போது அவரது உடல்நலக் குறைவு மகாராஷ்டிர அரசியலில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும், அடுத்த சில நாட்கள் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
