தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழகம் வருகிறார். இதையொட்டி அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் தனது பயணத்தை முடித்துக் கொண்டு, இன்று மதியம் 1.15 மணிக்கு சென்னை விமான நிலையம் வரும் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. அங்கிருந்து மதியம் 2.15 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்திற்கு செல்கிறார். அங்கு நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார்.

தமிழக வருகைக்கு முன்னதாக பிரதமர் மோடி தனது ‘எக்ஸ்’ (X) தளத்தில் தமிழில் பதிவிட்டுள்ளதாவது: “தமிழ்நாடு தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இருக்கிறது! ஊழல் மலிந்த திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது என்று தமிழக மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். மதுராந்தகத்தில் இன்று நடைபெறும் பேரணியில் கூட்டணித் தலைவர்களுடன் நான் பங்கேற்கிறேன்.”

மேலும், மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் தமிழக மக்களின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், மக்களின் பிராந்திய விருப்பங்களை நிறைவேற்ற தங்களது கூட்டணி அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சட்டசபை தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பின்வரும் கட்சிகள் இணைந்துள்ளன: பாமக (அன்புமணி ராமதாஸ் தரப்பு) அமமுக (டிடிவி தினகரன்) தமிழ் மாநில காங்கிரஸ் (ஜி.கே.வாசன்) இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி,
தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், புரட்சி பாரதம்

மேலும் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தொகுதி பங்கீடு, கூட்டணிப் பேச்சுவார்த்தை மற்றும் பிரசாரப் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. பிரதமரின் இன்றைய வருகை, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் பணிகளுக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது