இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணி பொதுக்குழுக் கூட்டம் நேற்று திருச்சியில் நடைபெற்றது. மாநில தலைவர் எம்.எஸ். சல்மான் முகமது தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினார்.

அவர் பேசுகையில், இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை தொடர்ந்து வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில், தமிழ்நாட்டில் 97 லட்சத்து 37 ஆயிரத்து 832 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். இதில், அனைத்து மாவட்டங்களிலும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் முஸ்லிம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில், இறந்தவர்கள் மற்றும் இரட்டை பதிவுகள் உள்ள வாக்காளர்களை நீக்கியது முறையானதே. ஆனால், இடம்பெயர்ந்தவர்களை பட்டியலில் இருந்து நீக்கியதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், இது தொடர்பான தவறுகளை ஜனவரி மாதத்திற்குள் தேர்தல் ஆணையம் சரிசெய்யும் என நம்புவதாகவும் அவர் கூறினார்.

மேலும், வரும் சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில், முஸ்லிம்கள் போட்டியிட 16 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என தி.மு.க. தலைமையிடம் வலியுறுத்தப்படவுள்ளதாக தெரிவித்தார். அதில், 5 தொகுதிகளை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என கேட்க உள்ளதாகவும் அவர் கூறினார்.