மேற்கு வங்காள மாநிலம் நாடியா மாவட்டத்துக்கு உட்பட்ட தகேர்பூரில் நடைபெறவிருந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேரில் பங்கேற்று உரையாற்ற திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கடும் பனிமூட்டம் காரணமாக அவரது ஹெலிகாப்டர் அங்கு தரையிறங்க முடியாததால், அது கொல்கத்தா விமான நிலையத்திற்கே திரும்பியது.
இதையடுத்து, ராணாகாட் பகுதியில் உள்ள நேதாஜி பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில், பிரதமர் மோடி காணொலி காட்சி (வீடியோ கான்பரன்ஸ்) மூலம் உரையாற்றினார். அப்போது, மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசை அவர் கடுமையாக விமர்சித்தார்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஏன் மக்களை பணயக்கைதிகளாக வைத்துக் கொண்டு அவர்களை துன்புறுத்துகிறது என கேள்வி எழுப்பிய பிரதமர், கம்யூனிஸ்டுகளின் அனைத்து தீய குணங்களையும் அந்தக் கட்சி உள்வாங்கி கொண்டதோடு, அவர்களின் மிக மோசமான தலைவர்களையும் தன் வசம் சேர்த்துக் கொண்டது போல தோன்றுகிறது என குற்றம்சாட்டினார்.
இந்த நிலையில், பிரதமர் மோடி காணொலி காட்சி வழியே உரையாற்றியதைக் குறித்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சவுகடா ராய் விமர்சனம் செய்துள்ளார். பிரதமரின் அரசியல் பொதுக்கூட்டம் வெற்றி பெறவில்லை என்றும், வங்காள மண்ணில் பிரதமர் மோடி கால் வைக்க கடவுளுக்கே விருப்பமில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், பா.ஜ.க. ஆளும் பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், மேற்கு வங்காளத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை சிறப்பாக உள்ளதாகவும் சவுகடா ராய் கூறினார்.
