கரூர் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, தற்போது கோவை மேற்கு மண்டல தி.மு.க. பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களில் தேர்தல் முன்னேற்பாட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்த சூழலில், அவர் கரூர் தொகுதியை விட்டு கோவையில் உள்ள ஒரு தொகுதியில் இருந்து போட்டியிட உள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின. இதற்கு விளக்கம் அளித்த செந்தில்பாலாஜி, அந்த தகவல்களை முழுமையாக மறுத்தார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எஸ்.ஐ.ஆர். பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை பூத் வாரியாக ஆய்வு செய்யுமாறு கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தகுதியான வாக்காளர்கள் விடுபட்டுள்ளார்களா, தகுதியற்றவர்கள் சேர்க்கப்பட்டுள்ளார்களா என்பதை ஆய்வு செய்து, தேவையான ஆட்சேபனைகளை பதிவு செய்ய வேண்டும் எனவும் கூறினார். மேலும், தமிழக அரசியல் சூழலில் எந்தக் கட்சியாக இருந்தாலும் தி.மு.க.வை விமர்சிக்காமல் அரசியல் செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது என்றும், தி.மு.க. மக்களிடையே வலுவான அரசியல் இயக்கமாக இருப்பதாலேயே இத்தகைய விமர்சனங்கள் எழுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

பா.ஜ.க., அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அனைத்தும் தி.மு.க.வை மட்டுமே மையமாக வைத்து அரசியல் நடத்தி வருவதாக கூறிய அவர், தேவையற்ற குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க அவசியமில்லை என்றும் தெரிவித்தார். அதே நேரத்தில், அரசின் செயல்பாடுகளை மேம்படுத்த உதவும் ஆலோசனைகள் இருந்தால், அவற்றை ஏற்றுக்கொள்ள தி.மு.க. தயாராக இருப்பதாகவும் கூறினார்.

வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க. தலைமையிலான கூட்டணி தமிழகத்தில், குறிப்பாக கோவையில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையை அவர் வெளியிட்டார்.

தான் கோவையில் போட்டியிடப் போவதாக பரவும் தகவல்கள் அடிப்படை இல்லாதவை என்றும், கரூர் தொகுதி மீது தனக்கு முழு நம்பிக்கை உள்ளதாகவும் செந்தில்பாலாஜி தெரிவித்தார். மேலும்  கரூர் மக்கள் தொடர்ந்து தன்னை வெற்றி பெறச் செய்துள்ளதாகவும், சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் கூறினார்.