அதிமுகவுடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையிலான குழு நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தொகுதிப் பங்கீடு தொடர்பாக கசியவிடப்பட்டதாக கூறப்படும் தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக, தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள சில கட்சிகள், தவெக (தமிழக வெற்றிக் கழகம்) பக்கம் திசைமாறும் சூழல் உருவாகியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிமுக தலைமையுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், “தினகரன், ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) ஆகியோரை கூட்டணிக்குள் இணைப்பது குறித்து எந்தவிதமான பேச்சுவார்த்தையும் இன்று நடைபெறவில்லை” என்று தெரிவித்தார்.

ஆனால், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் ஓபிஎஸ் ஆகியோருக்கு முறையே ஆறு, ஆறு, மூன்று தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என ஊடகங்களில் வெளியான செய்திகள், அந்தக் கட்சித் தலைவர்களை கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது.

இது தொடர்பாக தினகரன் கூறுகையில், “தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக-க்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக வெளியான தகவல்கள் முழுக்க முழுக்க வதந்தி. யாரை தோற்கடிக்கும் நோக்கில் அமமுக உருவாக்கப்பட்டதோ, அந்த அரசியல் பாதையில்தான் தொடர்ந்து பயணிப்போம்” என்றார்.

அதேபோல், ஓபிஎஸ்ஸின் ‘அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகம்’ மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய பலரும், “எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்க முடியாது. மூன்று தொகுதிகளுக்காக அந்த அணிக்குச் செல்லக் கூடாது” என்று வலியுறுத்தினர். இதனை ஓபிஎஸ்ஸும் வழிமொழிந்ததாக கூறப்படுகிறது. அதிமுக கூட்டணியில் இடம் கிடைக்காத நிலையில், ஓபிஎஸ்ஸுக்கும் தினகரனுக்கும் திமுக அல்லது தவெக அணியே அடுத்த அரசியல் தேர்வாக இருக்கும் சூழல் உருவாகியுள்ளது.

ஆரம்பம் முதலே தவெக-வுக்கு ஆதரவான கருத்துகளை முன்வைத்து வரும் தினகரன், “தவெக தலைமையில் கூட்டணி அமைந்தால், அதிமுக மூன்றாவது இடத்துக்கு தள்ளப்படும்” என தெரிவித்திருந்தார். இருப்பினும், அமமுக விவகாரத்தில் தவெக தரப்பில் இதுவரை உறுதியான பதில் அளிக்கப்படவில்லை. இந்த நிலையில், தினகரனுடன் தவெக தரப்பினர் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேபோல், ஓபிஎஸ்ஸும் தவெக பக்கம் செல்லக்கூடிய சாத்தியங்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறுவது உண்மை என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும் உறுதிப்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே, தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்தும், ஆறு தொகுதிகள் விவகாரத்தில் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். “இந்த செய்தியை திட்டமிட்டு பரப்பிய கட்சிக்கே இது அழிவு காலத்தை ஏற்படுத்தும்” என்று அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. தற்போதைக்கு திமுக, அதிமுக, தவெக ஆகிய மூன்று அணிகளுடனும் தேமுதிக பேச்சுவார்த்தைக்கு வாயிலை திறந்து வைத்திருந்தாலும், இறுதி நேரத்தில் கவுரவமான இடங்களைப் பெறுவதற்காக தவெக அணியையே தேர்வு செய்யும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கணிக்கின்றன.
திமுகவை வீழ்த்த மெகா கூட்டணி அமைக்கப்போவதாக கூறி வரும் பாஜக, இந்தக் கட்சிகள் அனைத்தும் தங்களின் போக்கிலேயே செல்ல அனுமதிக்குமா, அல்லது இறுதி நேரத்தில் அரசியல் திருப்பம் ஏற்படுமா என்பது குறித்து அரசியல் பார்வையாளர்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.