பா.ஜனதா கட்சியின் சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம், தொழுகைக்காக கோவை ரெயில் நிலையம் அருகே உள்ள பள்ளிவாசலுக்கு நேற்று சென்றார். இதையொட்டி, இன்ஸ்பெக்டர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கு நடைபெற்ற ஜும்மா தொழுகையில் அவர் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வேலூர் இப்ராஹிம், “நான் பல்வேறு ஊர்களில் தொழுகைக்காக பள்ளிவாசல்களுக்கு செல்லும்போது எதிர்ப்புகள் எழுந்துள்ளன. அந்த சூழலில், கோவையில் எனக்கு உரிய பாதுகாப்பு அளித்து தொழுகை நடத்த அனுமதித்த போலீசாருக்கு நன்றி. குறிப்பாக, உரிய நடவடிக்கை எடுத்த காவல் ஆணையருக்கு எனது பாராட்டுகளை தெரிவிக்கிறேன்” என்றார்.
மேலும் அவர், “வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். நடிகர் விஜய் அரசியல் களத்தை ஓட்டுகளைப் பிரிப்பதற்காக பயன்படுத்தக் கூடாது. தமிழக மக்களின் மீது உண்மையான அக்கறை இருந்தால், அவர் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவது நல்லது. இல்லையெனில், அரசியலில் நடிகர் கமல்ஹாசனை விட மோசமான நிலைக்கு தள்ளப்படுவார்” என்று தெரிவித்தார்.
