கோவையில் அண்மையில் கல்லூரி மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில்,  ஒரு பெண் காரில் கடத்தப்படுவது போன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி மீண்டும் பெரும் பரபரப்பை கிளப்பின. இந்தச் சம்பவத்தைச் சுட்டிக்காட்டி, தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று கூறி எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தன.

இந்தச் சூழலில், பெண் கடத்தப்பட்டதாக வெளியான சிசிடிவி காட்சி விவகாரத்தில், கோவை மாநகர காவல் ஆணையர் விளக்கம் அளித்துள்ளார். அந்தப் பெண் கடத்தப்படவில்லை என்றும், குடும்பத் தகராறே காரணம் என்றும், அந்தப் பெண் கூச்சலிட்டதால், மக்கள் தவறுதலாக அதனைக் கடத்தல் எனப் புகார் அளித்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட அந்தப் பெண்ணே வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.

“>

 

அந்த வீடியோவில், “கோவை ராவுத்தர் பிரிவு சாலையில் காரில் சென்றபோது கணவருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. நான் உங்களுடன் வரவில்லை என்று கூறி காரை விட்டு இறங்கினேன். அவர் என்னை அடித்தார், நான் பதிலுக்கு அடித்தேன். எங்களுடைய மகன் இருவரையும் கண்டித்து, ஏன் மானத்தை வாங்குகிறீர்கள் என்று கூறியதும், நாங்கள் மீண்டும் காரில் ஏறிச் சென்றுவிட்டோம்” என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.