மும்பையின் கார்கர் பகுதியில் உள்ள ‘துலிப் கூட்டுறவு வீட்டுவசதி சங்க’ குடியிருப்பில், வியாழக்கிழமையன்று மின்தூக்கி திடீரென பழுதடைந்ததால் நான்கு இளைஞர்கள் உள்ளே மாட்டிக்கொண்டனர். கட்டடத்தின் நான்காவது மாடியில் மின்தூக்கி நின்றபோது திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் இந்த விபத்து ஏற்பட்டது.
மேலும் மின்சாரம் இல்லாததால் உள்ளே காரிருள் சூழ்ந்ததோடு, காற்றோட்டமும் இல்லாமல் போனது. இதனால் மூச்சு திணறி, கடுமையான வெக்கையில் வேர்த்து விறுவிறுத்து, மரண பயத்தில் அந்த நான்கு இளைஞர்களும் சுமார் 90 நிமிடங்கள் உள்ளே தவித்தனர்.தங்களை காப்பாற்றுமாறு அவர்கள் போட்ட கூச்சலைக் கேட்டு, அங்கிருந்த குடியிருப்புவாசிகள் உடனடியாக சிட்கோ தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர்.
இதனால் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், மின்தூக்கியின் கதவை நவீன வெட்டும் கருவிகள் கொண்டு லாவகமாக உடைத்து, உள்ளே உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 4 இளைஞர்களையும் பத்திரமாக மீட்டனர். தீயணைப்புத் துறையினரின் இந்த அதிவேகமான மற்றும் துரிதமான மீட்பு நடவடிக்கையினால் மிகப்பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு, இளைஞர்கள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.
