பாலி நகரைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தின் நிறுவனருக்கும், விபத்தில் சிக்கிய அவரது ஊழியருக்கும் இடையே வாட்ஸ்அப்பில் நடந்த நெகிழ்ச்சியான உரையாடல் தற்போது இணையத்தில் வைரலாகி பலரது இதயங்களை வென்று வருகிறது.

மேலும் மோட்டார் சைக்கிள் விபத்தில் கீழே விழுந்து காயமடைந்த அந்த நிறுவனத்தின் மென்பொருள் உருவாக்குநர் தனக்கு லேசான தலைசுற்றல் மட்டுமே இருப்பதாகக் கூறி, அன்றைய தினமே மதியத்திற்கு மேல் அலுவலகம் வந்து வேலை செய்ய அனுமதி கேட்டார்.

ஆனால், அவரது உடல்நிலையை விட வேலை முக்கியமல்ல என்று உறுதியாக மறுத்த பெண் அதிகாரி, வலி நிவாரணிகளை மட்டும் எடுத்துக் கொண்டு அலட்சியமாக இருக்க வேண்டாம் என்றும், உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்து கொள்ளுமாறும் கட்டாயப்படுத்தி அறிவுறுத்தினார்.

இந்த அன்பான உரையாடலின் ஸ்கிரீன்ஷாட்டை அந்த பெண் தொழிலதிபர் ‘த்ரெட்ஸ்’ சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். “என் ஊழியர்கள் அனைவரும் என் பிள்ளைகளைப் போன்றவர்கள்” என்று அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டதுடன், அந்த ஊழியரைத் தகுந்த மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பியதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வேலை அழுத்தங்களுக்கு மத்தியில், ஊழியர்களின் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளித்து ஒரு தாய் போல அக்கறை காட்டிய இந்த பாசமுள்ள பாஸின் மனிதநேயமிக்க அணுகுமுறையை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பாராட்டித் தீர்த்து வருகின்றனர்.