டிண்டர் செயலி மூலம் பழகிய நபரால் ஹரியானாவைச் சேர்ந்த பெண் நீதிபதி ஒருவர் ₹52 லட்சம் வரை ஏமாற்றப்பட்ட அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம், தன்னை ஒரு ரகசிய அரசுத் துறையின் அதிகாரி என்று அறிமுகப்படுத்திக் கொண்ட அபிமன்யு வசிஷ்ட் என்பவருடன் இந்த நீதிபதிக்கு டிண்டர் தளம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
மேலும் நாளடைவில் இது காதலாக மாறிய நிலையில், அதிக லாபம் தரும் முதலீட்டுத் திட்டங்கள் இருப்பதாகக் கூறி, அந்த நபர் பெண் நீதிபதியிடமிருந்து பல தவணைகளாக ₹52 லட்சத்திற்கும் அதிகமான பணத்தைப் பெற்றுள்ளார். ஆனால், வாக்குறுதி அளித்தபடி எந்த லாபமும் கிடைக்காமல், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த நீதிபதிக்கு பின்னரே இது ஒரு திட்டமிட்ட ‘ஹனிட்ராப்’ மோசடி என்பது தெரியவந்தது.
இந்த வழக்கின் சுவாரசியமான திருப்பம் என்னவென்றால், தனது பதவி மற்றும் சமூக அந்தஸ்து காரணமாக ஏற்பட்ட தயக்கத்தால் பெண் நீதிபதி நேரடியாகப் புகார் அளிக்காமல், தனது வீட்டுப் பணிப்பெண்ணின் பெயரில் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்த விசாரணையில் டெல்லி நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.
அதே நேரத்தில், உண்மையான பாதிக்கப்பட்ட நபரான நீதிபதி மறைமுகமாகப் புகார் அளித்ததற்கு நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்ததுடன், இதுபோன்ற காதல் மோசடிகளில் அவமானமும் தயக்கமும் ஏற்படுவது இயல்புதான் என்றாலும், அது நேர்மையான விசாரணைக்கு முட்டுக்கட்டையாக இருக்கக்கூடாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், வாட்ஸ்அப் மற்றும் டிண்டர் அரட்டை விவரங்களை முழுமையாகச் சேகரித்து விசாரணையை விரைவுபடுத்துமாறு காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
