தேனி மாவட்டத்தில் உள்ள சிங்கராஜபுரத்தில் தமிழன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயலஷ்மி என்ற மனைவி உள்ளார். இன்று தம்பதியினருக்கு ரிவன் ராஜா என்ற மகனும், ஒரு மகளும் இருந்துள்ளனர். ராஜா எந்த வேலைக்கும் செல்லாமல் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக தினமும் மது குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்தார். மேலும் ராஜா அடிக்கடி பணம் கேட்டு தனது தாயை தொந்தரவு செய்துள்ளார். நேற்று முன்தினம் ராஜா மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்ததால் தந்தைக்கும் மகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பிறகு போதையில் ராஜா தூங்கிவிட்டார்.

நள்ளிரவு நேரம் தமிழன் தூங்கிக் கொண்டிருந்த தனது மகனை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதனால் சம்பவ இடத்திலேயே ராஜா உயிரிழந்தார். மறுநாள் காலை தமிழன் வருசநாடு காவல் நிலையத்திற்கு சென்று தனது மகனை கொலை செய்த விவரத்தை கூறி சரண் அடைந்தார். பின்னர் போலீசார் வீட்டிற்கு சென்று ராஜாவின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.