ரயில் பெட்டி ஒன்றில் தனியாகப் பயணம் செய்து கொண்டிருந்த முதியவர் ஒருவரை, அங்கு வந்த 8-10 இளைஞர்கள் கொண்ட கும்பல் ஒன்று வம்புக்கு இழுத்து வேடிக்கை பார்க்க நினைத்தது. ரயிலின் அபாயச் சங்கிலியைஇழுத்துவிட்டு, அதற்கான அபராதத் தொகை ரூ.500-க்கு பதிலாக தங்களுக்குள் ரூ.1,200 வசூலித்துக் கொண்டு, அந்தப் பழியை முதியவர் மீது சுமத்த திட்டமிட்டனர். முதியவர் எவ்வளவோ கெஞ்சியும் கேட்காமல், இளைஞர்கள் சங்கிலியை இழுக்க, ரயில் நின்றது. அங்கு வந்த ரயில்வே போலீசாரிடம், “இந்த முதியவர்தான் சங்கிலியை இழுத்தார்” என்று இளைஞர்கள் கூட்டமாகப் பழிபோட்டனர்.

ஆனால், அந்த முதியவர் பதற்றமடையாமல் தனது அனுபவ அறிவால் தந்திரமாகப் காய்களை நகர்த்தினார். போலீசாரிடம், “ஆமாம், நான்தான் சங்கிலியை இழுத்தேன்; இந்த இளைஞர்கள் என்ன மிரட்டி என்னிடமிருந்த 1,200 ரூபாயைப் பறித்துக் கொண்டனர், அதான் சங்கிலியை இழுத்தேன்” என்று கூறி, அந்தப் பண முடிச்சின் அடையாளங்களையும் துல்லியமாகக் கூறினார். போலீசார் சோதனையிட்டபோது, இளைஞரின் பாக்கெட்டில் இருந்து சரியாக 1,200 ரூபாய் சிக்கியது. சற்றும் எதிர்பாராத இந்த ட்விஸ்ட்டால் அதிர்ந்துபோன போலீசார், இளைஞர்களைக் கைது செய்து முதியவரின் கையில் பணத்தை ஒப்படைத்தனர். ‘அனுபவத்தை அவ்வளவு எளிதாக ஏமாற்றிவிட முடியாது’ என்ற வரிகளுடன் எக்ஸ் (X) தளத்தில் வைரலாகும் இக்கதைக்கு, முதியவரின் மாஸான பதிலடியைப் பாராட்டி நெட்டிசன்கள் லைக்குகளைக் குவித்து வருகின்றனர்.