இந்தியாவின் மிகக் கடினமான தேர்வுகளில் ஒன்றாகக் கருதப்படும் மத்திய பொதுச் சேவை ஆணையத்தின் (UPSC) சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற லட்சக்கணக்கான இளைஞர்கள் இரவு பகலாகப் படித்து வருகின்றனர். இந்நிலையில், சமூக வலைதளங்களில் ஐஏஎஸ் தேர்வுக்குத் தயாராகும் பெண் மருத்துவர் ஒருவரின் தினசரி கால அட்டவணை வீடியோ வெளியாகி, பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பிசியோதெரபிஸ்ட் மருத்துவரான ஜோதி வர்மா என்பவர், தனது முதல் முயற்சியிலேயே யுபிஎஸ்சி தேர்வில் முத்திரை பதிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு, நாள் ஒன்றுக்கு 18 மணி நேரம் உழைக்கும் தனது கடினமான தினசரி வாழ்க்கையை யூடியூப் மற்றும் எக்ஸ் (X) தளத்தில் பகிர்ந்துள்ளார்.
உலகமே ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் அதிகாலை 3:50 மணிக்கே டாக்டர் ஜோதியின் தினசரி போராட்டக் களம் தொடங்கிவிடுகிறது. சரியாக அதிகாலை 4:22 மணிக்கு வீட்டின் மொட்டை மாடியில் அமர்ந்து படிக்கத் தொடங்கும் இவரது முதல் கட்டப் படிப்பு காலை 6:40 மணி வரை நீடிக்கிறது. அதன் பின்னர் யோகாசனம் மற்றும் உடற்பயிற்சிகளை முடித்துவிட்டு, மீண்டும் புத்தகங்களோடு தஞ்சம் புகுகிறார்.
View this post on Instagram
ஒரு வேலைக்குச் செல்லும் பெண்ணாக மட்டுமின்றி, குடும்பப் பொறுப்புகளையும் சுமக்கும் இவர், காலை 11 மணிக்கு சமையலறைக்குச் சென்று சமைப்பது, துணி துவைப்பது, பாத்திரங்களைக் கழுவுவது போன்ற வீட்டு வேலைகளுக்கு இடையிலும் நேரத்தை ஒதுக்கிப் படிக்கிறார். மாலை 6:40 மணிக்குத் தனது கிளினிக்கிற்குச் சென்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவிட்டு வீடு திரும்பும் ஜோதி, சோர்வடைந்து ஓய்வெடுக்காமல் நள்ளிரவு வரை மீண்டும் தனது ஐஏஎஸ் கனவுக்காகப் புத்தகங்களைச் புரட்டுகிறார். இவரது இந்த அசாத்திய உழைப்பு தற்போது இளைஞர்கள் மத்தியில் பெரும் ஊக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
