தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பதவி தொடர்பான விவகாரத்தில், அக்கட்சியின் நிர்வாகியான அஜிதா ஆக்னஸ் தற்கொலை முயற்சி மேற்கொண்டதாக வெளியாகியுள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், கடந்த 2024 பிப்ரவரி 2-ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வரும் இக்கட்சியில், மாவட்டங்கள் தோறும் நிர்வாகிகள் மற்றும் பல்வேறு துறைப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தவெக நிர்வாகி அஜிதா ஆக்னஸ் தான் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்தப் பொறுப்புக்கு வேறு நபர்கள் அறிவிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, கடந்த டிசம்பர் 23-ம் தேதி பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, அஜிதா ஆக்னஸ் தனது ஆதரவாளர்களுடன் வந்து, மாவட்டச் செயலாளர் பதவி வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டார்.

அப்போது, தவெக தலைவர் விஜய் வந்த காரை அவர் மறித்து முழக்கங்கள் எழுப்பியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாவலர்கள் அவரை அங்கிருந்து அகற்றியதைத் தொடர்ந்து, கட்சி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடத்தினார்.

“விஜய் நேரில் வந்து பேச வேண்டும்; அதுவரை போராட்டம் தொடரும்” என அவர் கூறியதால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.

தவெக இணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார், அஜிதா ஆக்னஸுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். தூத்துக்குடி மாவட்டச் செயலாளராக சாமுவேல் ராஜ் நியமிக்கப்பட்டதுடன், அஜிதா ஆக்னஸுக்கு மாநில அளவில் பதவி வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அவர் போராட்டத்தை கைவிட்டார்.

அப்போது, “தலைமை மீது நம்பிக்கை உள்ளது; கடைசி வரை விஜய்யுடன் பயணிப்போம்” என அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் சில தவெக தொண்டர்கள், அஜிதா ஆக்னஸை எதிர்க்கட்சியின் கைகூலிகள் என விமர்சித்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் கடும் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், அதன் காரணமாக அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை முயற்சி மேற்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அவரை குடும்பத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தவெக தொண்டர்கள் மத்தியில் மட்டுமல்லாமல், தமிழக அரசியல் களத்திலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.