அதிமுகவில் இருந்து சில மாதங்களுக்கு முன்பு விலகியிருந்த வடவள்ளி சந்திரசேகர், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் மீண்டும் அக்கட்சியில் இணைந்தார்.
கோவை மாவட்டம் வடவள்ளி பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர், அதிமுகவில் எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் மற்றும் எம்.ஜி.ஆர். இளைஞரணி மாநில இணைச் செயலாளராக உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை வகித்தவர். அதிமுக ஆட்சிக் காலத்தில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் நெருங்கிய நண்பராகவும், வலது கரமாகவும் செயல்பட்டதால், கட்சியில் செல்வாக்கு மிக்கவராக இருந்து வந்தார். மேலும், அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான ‘நமது அம்மா’ நாளிதழின் வெளியீட்டாளராகவும் இருந்தார்.
கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில், கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்திருந்த சந்திரசேகருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. கோவை தெற்கு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால், கோவை மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் அம்மன் அர்ஜூனனுக்கு கோவை வடக்கு தொகுதி வழங்கப்பட்டது.
இதையடுத்து, உள்ளாட்சித் தேர்தலில் தனது மனைவி சர்மிளா சந்திரசேகரை மேயராகத் தேர்வு செய்ய முயற்சி மேற்கொண்டார். அவர் கவுன்சிலராக வெற்றி பெற்றாலும், கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் 3 வார்டுகளில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றதால், மேயர் பதவி கனவு நிறைவேறவில்லை.
அதேபோல், கடந்த 2024 மக்களவைத் தேர்தலிலும் சந்திரசேகருக்கு எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்கவில்லை.
2022-ஆம் ஆண்டில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடு மற்றும் அவரைச் சேர்ந்த நண்பர்கள், உறவினர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியபோது, சந்திரசேகரின் வீட்டிலும் சுமார் 9 மணி நேரம் சோதனை நடைபெற்றது. இதில் முக்கிய ஆவணங்கள், லேப்டாப் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதன் பின்னர், அதிமுக நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டங்களில் அவர் பங்கேற்பதை குறைத்துக் கொண்டார். இந்நிலையில், கடந்த ஏப்ரல் 11-ம் தேதி, தனிப்பட்ட காரணங்களை முன்வைத்து, கட்சியில் உள்ள அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டார். இது கோவை மாவட்ட அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், இன்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை நேரில் சந்தித்து, அவரது முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார் வடவள்ளி சந்திரசேகர். இதையடுத்து, வரவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அவருக்கு அதிமுகவில் வாய்ப்பு வழங்கப்படலாம் என்ற யூகங்கள் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளன.
