தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவான நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ (தவெக), தற்போது தீவிரமான உட்கட்சிப் பூசல்களை எதிர்கொண்டு வருகிறது. குறிப்பாக, கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் மீது தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்து வருகின்றனர்.
மேலும் கட்சியின் தொடக்க காலத்திலிருந்தே உழைத்தவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படாமல் புறக்கணிக்கப்படுவதாகவும், பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தின் ஆதரவாளர்களுக்கே முக்கியப் பதவிகள் ஒதுக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதன் உச்சகட்டமாக, தூத்துக்குடியைச் சேர்ந்த அஜிதா ஆக்னல் என்ற நிர்வாகி பனையூரில் விஜய் காரை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதுடன், விபரீத முடிவெடுத்து தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது கட்சிக்குள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மற்றொரு முக்கியப் புகாராக, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த செயலாளர்கள் ஆளுங்கட்சியான திமுக-வுடன் ரகசியத் தொடர்பில் இருப்பதாக நிர்வாகிகள் குற்றம் சாட்டுகின்றனர். சாதி, மதம் மற்றும் பணத்தின் அடிப்படையில் பதவிகள் வழங்கப்படுவதாகவும், இதனால் பல ஆண்டுகளாக உழைத்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஓரங்கட்டப்படுவதாகவும் அதிருப்தி கிளம்பியுள்ளது.
திருவள்ளூர், திண்டுக்கல், காஞ்சிபுரம் எனப் பல மாவட்டங்களிலும் இதே போன்ற எதிர்ப்புப் குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிறுத்தி விஜய் வியூகங்களை வகுத்து வரும் சூழலில், தவெக-வுக்குள் ஏற்பட்டுள்ள இந்த விரிசல் அவருக்குப் பெரும் சவாலாகவும் தலைவலியாகவும் மாறியுள்ளது. இதனை விஜய் எவ்வாறு கையாளப்போகிறார் என்பதே தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக உள்ளது.
