தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியைத் தவிர மற்ற தொகுதிகளுக்கு செயலாளர்கள் அறிவிக்கப்படவுள்ள நிலையில், தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் பதவி சாமுவேல் என்பவருக்கு வழங்கப்படவிருப்பதாக தகவல் வெளியானது. இதனால் அதிருப்தி அடைந்த தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளராக இருந்த அஜிதா ஆக்னல், தனது ஆதரவாளர்களுடன் சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றி கழக (தவெக) தலைமை அலுவலகத்திற்கு வந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.
அஜிதா ஆக்னல் கண்ணீருடன் அலுவலக வளாகத்தில் நீண்ட நேரம் காத்திருந்து, தவெக தலைவர் விஜயை சந்திக்க முயன்றதாக கூறப்படுகிறது. ஆனால், அலுவலக பாதுகாப்பு பணியில் இருந்த பவுன்சர்கள் அவரை உள்ளே செல்ல அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தினர். இதனால் அஜிதாவும் அவரது ஆதரவாளர்களும் அலுவலக வளாகத்திலேயே தொடர்ந்து காத்திருந்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமானோர் ஆதரவாளர்களுடன் பனையூருக்கு வந்திருந்ததால், தவெக தலைமை அலுவலகத்தைச் சுற்றியுள்ள பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஏற்கனவே தமிழகம் முழுவதும் 120 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய பொறுப்புகள் இன்று அறிவிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தூத்துக்குடி உள்ளிட்ட சில மாவட்டங்களின் புதிய நிர்வாகிகளை சந்திக்க தவெக தலைவர் விஜய் பனையூர் அலுவலகத்திற்கு வந்தபோது, அவரது காரை அஜிதா மற்றும் அவரது ஆதரவாளர்கள் மறித்து முற்றுகையில் ஈடுபட்டனர். இருப்பினும், விஜயின் கார் நிற்காமல் வேகமாக அங்கிருந்து சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாநில அளவிலான பொறுப்பு வழங்கப்படாததால் ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாகவே அஜிதா ஆக்னல் இந்த முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதாக தவெக வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது. மேலும் இந்த நிலையில் தற்போது தளபதி வரவில்லை என்றால் சாகுற வரைக்கும் இங்கதான் இருப்பேன் என கூறி தற்போது பனையூர் அலுவலகத்தின் முன்பாக அஜித்தா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதன் காரணமாக பொதுச்செயலாளர் ஆனந்த் பின்வாசல் வழியாக தன்னுடைய காரில் கட்சி அலுவலகத்தில் இருந்து வெளியேறினார்.
