தமிழகத்தில் வரும் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ள நிலையில், ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் அதனுடன் வழங்கப்பட வேண்டிய ரொக்கப் பணம் குறித்து தமிழக அரசு இன்று ஒரு முக்கிய முடிவை எடுக்க உள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டு பயனாளிகளின் விவரம் மற்றும் நிதி ஒதுக்கீடு குறித்து ஆலோசிக்கின்றனர்.
கடந்த 2025-ம் ஆண்டு நிதி நெருக்கடி காரணமாக ரொக்கப் பணம் வழங்கப்படாத நிலையில், வரும் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலை முன்னிட்டு இந்த முறை பரிசுத் தொகுப்புடன் ரூ.3,000 முதல் ரூ.5,000 வரை ரொக்கப் பணம் வழங்கப்படலாம் என்ற பலத்த எதிர்பார்ப்பு மக்களிடையே நிலவி வருகிறது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பரிசுத் தொகுப்பில் இடம்பெற வேண்டிய பொருட்களான பச்சரிசி, சர்க்கரை மற்றும் முழு கரும்பு ஆகியவற்றின் கொள்முதல் குறித்தும், தகுதியுள்ள 2.26 கோடி அரிசி அட்டைதாரர்களுக்கு பணத்தை எவ்வாறு விநியோகிப்பது என்பது குறித்தும் இறுதி முடிவு எடுக்கப்பட வாய்ப்புள்ளது.
இந்நிலையில் பணத்தை நேரடியாக வங்கிச் கணக்கில் செலுத்துவதா அல்லது ரேஷன் கடைகள் மூலம் டோக்கன் முறையில் வழங்குவதா என்பது பற்றியும் விவாதிக்கப்பட உள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ரூ.5,000 வழங்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் , பொங்கல் பரிசு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை அல்லது நாளைக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான டோக்கன் விநியோகம் ஜனவரி முதல் வாரத்தில் தொடங்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
