சென்னை பனையூரிலுள்ள தவெக தலைமை அலுவலகத்தில் இன்று (டிசம்பர் 14) காலையில் திடீரென தொண்டர்கள் குவிந்து போராட்டம் நடத்தினர். காரணம்: கட்சியின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் படத்தை பேனரில் போட்ட ஒரு வட்டச்செயலாளரை, திருவள்ளூர் மத்திய மாவட்டச்செயலாளர் மணிகண்டன் கட்சியிலிருந்து நீக்கிவிட்டாராம். இதைக் கேள்விப்பட்ட தொண்டர்கள் “இது அநியாயம்!” என்று கோபமாக வந்துவிட்டனர்.

அதோடு நிற்கவில்லை. “பதவி தருவதாகச் சொல்லி பலரிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கிவிட்டு ஏமாற்றிவிட்டார் மணிகண்டன்” எனக் குற்றம்சாட்டி கோஷமிட்டனர். “தளபதி பாருங்கள்… அநியாயம் நடக்குது” போன்ற கோஷங்கள் அலுவலக வளாகத்தில் ஒலித்தன. இந்த உள்கட்சி பிரச்சினை வெளியே தெரிந்ததால், தவெகவின் அரசியல் பயணத்தில் சிறு அதிர்வலைகள் எழுந்துள்ளன.