தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிப்ரவரி 13-ஆம் தேதி சேலம் சீலநாயக்கன்பட்டியில் கட்சி நிர்வாகிகளைச் சந்திக்க உள்ள நிலையில், இந்தக் கூட்டம் குறித்த முக்கிய விளக்கத்தைத் தவெக சேலம் மாநகர மாவட்டச் செயலாளர் பார்த்திபன் அளித்துள்ளார். அன்றைய தினம் நடைபெறவுள்ள சந்திப்பிற்குப் போதிய கால அவகாசம் இல்லாத காரணத்தால், இது முழுக்க முழுக்கக் கட்சி நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டமாக மட்டுமே நடத்தப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்க 5,000 நிர்வாகிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், மற்ற நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கூட்டத்திற்கு நேரில் வருவதைத் தவிர்க்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார். நிர்வாகிகள் சந்திப்பு என்பதால் பொதுமக்கள் மற்றும் பிற மாவட்டத் தொண்டர்கள் இந்தக் கூட்டத்தைத் தொலைக்காட்சி வாயிலாகவோ அல்லது தொலைபேசி மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாகவோ வீடுகளில் இருந்தே கண்டு களிக்கலாம் எனப் பார்த்திபன் அறிவுறுத்தியுள்ளார்.

பாதுகாப்பு காரணங்கள் மற்றும் நேரக் குறைவு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இது பொதுமக்களைச் சந்திக்கும் கூட்டம் இல்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். சேலத்தில் விஜய்யை நேரில் பார்க்கலாம் என ஆவலுடன் இருந்த பொதுமக்களுக்கு இந்த அறிவிப்பு சற்று ஏமாற்றத்தைத் தந்தாலும், கட்சிப் பணிகளை வேகப்படுத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தவெக தரப்பில் கூறப்படுகிறது.