மகாராஷ்டிராவின் சிப்ளூன் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில், கல்வி ஆண்டின் முதல் நாளன்றே மாணவிகளுக்கு நேர்ந்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாகப் பள்ளியின் முதல் நாளில் புதிய வகுப்பிற்கு வரும் மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கியோ ரோஜாப்பூக்கள் கொடுத்தோ உற்சாகமாக வரவேற்பு அளிப்பதுதான் வழக்கம்.
ஆனால், இந்த அரசுப் பள்ளியில் மாணவிகளுக்கு முற்றிலும் மாறான, கசப்பான அனுபவம் காத்திருந்தது. புதிய வகுப்பறைக்கு வந்த மாணவிகளை வரவேற்பதற்குப் பதிலாக, அங்கிருந்த கனமான இரும்பு அலமாரிகள் மற்றும் மேசைகளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் சுமந்து செல்லுமாறு பள்ளி நிர்வாகம் கட்டாயப்படுத்தியுள்ளது.
இதனால் சிறுமி என்றும் பாராமல், தங்களின் சக்திக்கு மீறிய கனமான இரும்பு அலமாரிகளை மாணவிகள் கஷ்டப்பட்டுத் தூக்கிச் செல்லும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி பார்ப்போரைக் கண் கலங்கச் செய்துள்ளது.
மேலும் கல்வி கற்க வேண்டிய முதல் நாளிலேயே மாணவிகளை இப்படிப்பட்ட கடினமான உடல் உழைப்பில் ஈடுபடுத்திய பள்ளி நிர்வாகத்தின் மீது பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த விவகாரம் பூதாகரமானதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பள்ளி அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் கல்வித்துறை உறுதி செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
