திருச்சியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். விஜய் வரி ஏய்ப்பு செய்துள்ளதை நீதிமன்றமே தனது தீர்ப்பின் மூலம் சுட்டிக்காட்டியுள்ளதாகவும், இதன் மூலம் அவர் ஒரு ஊழல்வாதி என்பது நிரூபணமாகிவிட்டதாகவும் இபிஎஸ் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

அரசியலுக்கு வந்த பிறகு மக்கள் மத்தியில் இருக்க வேண்டிய ஒரு தலைவர், இப்படி வரி ஏய்ப்பு புகாரில் சிக்கியிருப்பது அவரது அரசியல் நேர்மையைக் கேள்விக்குறியாக்குவதாக அவர் சாடினார். மேலும், கட்சி ஆரம்பித்த பிறகு விஜய் மக்கள் பணிகளில் ஈடுபடாமல் ஒதுங்கியிருப்பதாகக் குற்றம்சாட்டிய எடப்பாடி பழனிசாமி, குறிப்பாக கரூர் சம்பவம் நடந்த பிறகு சுமார் 72 நாட்கள் அவர் தலைமறைவாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

“எந்தவொரு உண்மையான தலைவரும் இவ்வளவு காலம் மக்களைச் சந்திக்காமல் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்க மாட்டார்” என்று அவர் காட்டமாக விமர்சித்தார். விஜய்யின் அரசியல் வருகையை இதுவரை பெரிதாகக் கண்டுகொள்ளாத அதிமுக, தற்போது நேரடியாகக் கடுமையான ஊழல் புகார்களை முன்வைப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.