தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடப் போவதாக வெளியாகியுள்ள தகவல்கள் அவரது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, சென்னையின் விருகம்பாக்கம் மற்றும் திருச்சியின் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் அவர் களம் காண வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. ஏற்கனவே விக்கிரவாண்டி, வேளச்சேரி போன்ற தொகுதிகள் பரிசீலனையில் இருந்த நிலையில், தற்போது இந்த இரண்டு தொகுதிகள் முன்னிலையில் இருப்பது தவெக தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது.
தலைநகர் சென்னையில் ஒரு தொகுதியிலும், தமிழகத்தின் மையப் பகுதியான திருச்சியில் மற்றொரு தொகுதியிலும் போட்டியிடுவதன் மூலம், மாநிலம் முழுவதும் தனது செல்வாக்கை நிலைநாட்ட விஜய் திட்டமிட்டுள்ளார். இந்த இரண்டு தொகுதிகளிலும் இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், அது தனக்குச் சாதகமாக அமையும் என அவர் கருதுவதாகக் கூறப்படுகிறது. விஜய்யின் இந்த இரட்டைத் தொகுதிப் போட்டி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதால், தமிழக அரசியல் களம் இப்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ளது.
