பீகார் மாநிலம் கயா அருகே உள்ள கிஜ்ரா சராய் நகரை சேர்ந்த வாலிபர் மற்றும் அவரது மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டுக் கொண்டே வந்துள்ளன. இதற்கிடையே, சமீபத்தில் மீண்டும் ஏற்பட்ட வாக்குவாதம் கடும் முறையில் மாறியுள்ளது. தகராறின் போது கணவன் மனைவியை பலமுறைகள் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் கடும் கோபத்துக்குள்ளான மனைவி, திடீரென கணவனை கீழே தள்ளி, அவர் மீது உட்கார்ந்த நிலையில், அவரது நாக்கை கடித்து மென்று விழுங்கியுள்ளார். இந்நிலையில் வாலிபர் வலியால் அலறி துடித்ததாக தெரிவிக்கப்படுகிறது. அவரது துடிப்பு மற்றும் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து பார்த்தனர். அதில் மனைவி கணவன் மீது உட்கார்ந்திருந்ததும், அவரது முகம் மற்றும் உடலில் ரத்தம் பரவியிருந்ததும் கண்டவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
உடனே அப்பகுதி மக்கள் இருவரையும் பிரித்து சமாதானப்படுத்தி, வாலிபரை அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவருடைய உடலில் இருந்து அதிக அளவில் ரத்தம் வெளியேறியிருந்ததால் அவரது நிலை மிகவும் மோசமடைந்தது. இதையடுத்து, மேல்சிகிச்சைக்காக அவரை கயா மாவட்டத்தில் உள்ள மகத் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த கொடூரமான சம்பவம் கிஜ்ரா சராய் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் மத்தியில் இது குறித்து பரபரப்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. மேலும், சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மருத்துவர்கள் கூறுகையில், வாலிபரின் நிலை தற்போது கவலைக்கிடமாக உள்ளது என்றும், அவர் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
