உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் அருகே உள்ள மலாவ் கிராமத்தில், தர்பூசணி மற்றும் மேகி நூடுல்ஸ் சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் கடுமையான உணவு நச்சுத்தன்மையால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த புதன்கிழமை மாலை 4 மணியளவில், அக்குடும்பத்தினர் முதலில் தர்பூசணி பழத்தை ஆவலோடு சாப்பிட்டுள்ளனர்.
அதன் பிறகு, சுமார் ஒன்றரை மணி நேரம் கழித்து குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என அனைவரும் மேகி நூடுல்ஸ் சமைத்து சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக, நள்ளிரவு 1 மணியளவில் இருந்து அவர்களுக்கு அடுத்தடுத்து கடுமையான வயிற்று வலி, வாந்தி, பேதி மற்றும் மூச்சுத் திணறல் போன்ற உபாதைகள் ஏற்படத் தொடங்கியுள்ளன. பாதிக்கப்பட்டவர்களில் 8 வயது சிறுமி முதல் 70 வயது முதியவர் வரை அடங்குவர்.
இதனால் ஆரம்பத்தில் கிராமத்திற்கு அருகில் உள்ள உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால், அவர்கள் உடனடியாக கோரக்பூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். தற்போது மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் அவர்களுக்குத் தேவையான சிகிச்சைகளும், குளுக்கோஸ் போன்ற மருந்துகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும் தர்பூசணியில் இருந்த ஏதேனும் ரசாயனக் கலப்பால் இந்த பாதிப்பு ஏற்பட்டதா அல்லது மேகி நூடுல்ஸ் காரணமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இதுகுறித்த மருத்துவப் பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே, இந்த உணவு நச்சுத்தன்மைக்கான உண்மையான காரணம் என்ன என்பது முழுமையாகத் தெரியவரும் என மாவட்ட மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
