பாபா ராம்தேவ் தலைமையிலான பதஞ்சலி ஆயுர்வேதம் தயாரித்த நெய்யின் மாதிரி தரத் தகுதியை கடந்து செல்லவில்லை என்பது நிரூபிக்கப்பட்டதையடுத்து, உத்தரகாண்ட் மாநிலம் பித்தோராகர் கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றம் நிறுவனத்துக்கு அபராதம் விதித்துள்ளது.
இந்த வழக்கு அக்டோபர் 2020-ல் தொடங்கியது. பித்தோராகரில் உள்ள ஒரு கடையில் விற்பனை செய்யப்பட்ட பதஞ்சலி நெய்யின் மாதிரியை உணவு பாதுகாப்புத் துறையின் மூத்த அதிகாரி திலீப் ஜெயின் வழக்கமான ஆய்வின்போது சேகரித்தார். முதன்மை சோதனை ருத்ரபூரில் உள்ள அரசு ஆய்வகத்தில் நடத்தப்பட்டது. அப்போது, நெய்யின் மாதிரி நிர்ணயிக்கப்பட்ட தர அளவுகளை பூர்த்தி செய்யாததுடன், அதில் கலப்படப் பொருட்களும் இருப்பது கண்டறியப்பட்டது. ஆரம்ப சோதனை முடிவுகளை பதஞ்சலி நிறுவனம் எதிர்த்தது. இதையடுத்து, மாதிரி காஜியாபாத் தேசிய ஆய்வகத்துக்கு மறுசோதனைக்காக அனுப்பப்பட்டது.
தேசிய ஆய்வகமும் நெய் தரமற்றது என்பதையும், கலப்படம் கலந்திருந்தது என்பதையும் உறுதிப்படுத்தியது. இதன் அடிப்படையில் உணவு பாதுகாப்பு அதிகாரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அனைத்து ஆதாரங்களையும் பரிசீலித்த நீதிமன்றம், பதஞ்சலி ஆயுர்வேத லிமிடெட் நிறுவனத்திற்கு – ரூ.1 லட்சம், விநியோகஸ்தருக்கு – ரூ.25,000, நெய் விற்ற கடைக்காரருக்கு – ரூ.15,000 என மொத்தம் ரூ.1.40 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டது.
மேலும் இந்த தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து, நுகர்வோர் மத்தியில் சந்தையில் கிடைக்கும் நெயின் தரம் குறித்து கவலை உருவாகியுள்ளது.
