இந்தியாவில் பல்வேறு நிதி முறைகேடுகள், பணமோசடி குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு லண்டனில் தஞ்சமடைந்து வாழும் தொழிலதிபர்கள் லலித் மோடி மற்றும் விஜய் மல்லையா, அங்கு சலசலப்பான வாழ்க்கை நடத்துவது தொடர்பான வீடியோக்கள் அடிக்கடி வெளியாகி வருகின்றன.

ஐபிஎல் முன்னாள் தலைவரான லலித் மோடி, 2010 முதல் லண்டனில் வசித்து வருகிறார். மறுபுறம் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் தலைவர் விஜய் மல்லையா, இந்திய வங்கிகளில் ரூ.9,000 கோடி கடன்களை ஏய்த்து லண்டனுக்கு தப்பிச் சென்றவர்.

 

இந்நிலையில், லலித் மோடி தனது 63வது பிறந்தநாளை கடந்த வார இறுதியில் லண்டனில் கொண்டாடினார். இந்த விருந்தில் விஜய் மல்லையாவும் கலந்து கொண்டது கவனத்தை ஈர்த்துள்ளது. விருந்தின் வீடியோக்களை லலித் மோடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பிரமாண்டமான இந்த விருந்து லண்டனின் மேஃபேரில் அமைந்துள்ள மதாக்ஸ் கிளப்பில் நடைபெற்றது. இந்த உயர்நிலை கிளப்பில் ஒரு மேசையை முன்பதிவு செய்ய குறைந்தபட்சம் ஆயிரம் பவுண்டுகள் (சுமார் ரூ.1.18 லட்சம்) செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விருந்தில் கேக் வெட்டும் காட்சிகள், நண்பர்கள் சூழ நடனமாடும் தருணங்கள் உள்ளிட்டவை வீடியோக்களில் இடம்பெற்று சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.