தமிழகத்தின் பொன்னேரியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க-வால் ஒருபோதும் தமிழ் மக்களையும், தமிழ் மொழியையும் தொட முடியாது என்று ஆவேசமாகத் தெரிவித்தார். பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள் அடிப்படையிலேயே தமிழக மக்களுக்கு எதிரானவை என்று சாடிய அவர், பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவிற்கு டெல்லியில் இருந்தபடி தமிழகத்தை ஆளுவதற்கு ஒரு ‘கூட்டாளி’ மட்டுமே தேவைப்படுவதாகக் குற்றம்சாட்டினார்.
தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாக்கவும், டெல்லியின் ஆதிக்கத்தைத் தடுக்கவும் திமுக தலைமையிலான கூட்டணி இங்கே வெற்றி பெற வேண்டியது அவசியம் என்று ராகுல் காந்தி வலியுறுத்தினார். தமிழ் மொழி மற்றும் பண்பாட்டிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் போதெல்லாம் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் துணை நிற்கும் என்றும், ஆர்.எஸ்.எஸ்-ன் கொள்கைகள் தமிழக மண்ணில் எடுபடாது என்றும் அவர் தனது பேச்சில் காரசாரமாகத் தெரிவித்தார்.
