ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரர்கள் பட்டியலில் அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி மீண்டும் முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார். ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியைப் பின்னுக்குத் தள்ளி அதானி இந்த நிலையை எட்டியுள்ளார்.

இந்த ஆண்டில் மட்டும் அதானியின் சொத்து மதிப்பு சுமார் 8.1 பில்லியன் டாலர்கள் உயர்ந்து, தற்போது மொத்தமாக 8.5 லட்சம் கோடி ரூபாயாக சுமார் 100 பில்லியன் டாலர்களுக்கும் மேல் அதிகரித்துள்ளது. இதன் மூலம் உலகப் பணக்காரர்கள் வரிசையில் அவர் 19-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். மறுபுறம், முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு தற்போது 90.8 பில்லியன் டாலராக உள்ளதால், அவர் ஆசிய அளவில் இரண்டாம் இடத்திற்கும், உலக அளவில் 20-வது இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளார்.

மேலும் இருவருக்கும் இடையிலான சொத்து மதிப்பு வித்தியாசம் மிகக் குறைவாகவே இருந்தாலும், பங்குச் சந்தையில் அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் அடைந்த அபரிமிதமான வளர்ச்சியே அதானியை மீண்டும் முதலிடத்திற்கு கொண்டு வந்துள்ளது. கடந்த சில காலங்களாக பல்வேறு சவால்களைச் சந்தித்த அதானி குழுமம், தற்போது மீண்டும் வர்த்தக ரீதியாக வலுவான நிலையை எட்டியிருப்பதை இந்தத் தரவுகள் உறுதிப்படுத்துகின்றன.