தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், தமிழ்நாட்டின் அரசியல் சூழலுக்கு கூட்டணி ஆட்சி செட் ஆகாது என்றும், ஆனால் காங்கிரஸ் உடனான கூட்டணி தொடரும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த கருத்து காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. குறிப்பாக, காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர் பிரவீன் சக்கரவர்த்தி தனது சமூக வலைதளப் பக்கத்தில் இதற்குப் பதில் அளிக்கும் விதமாக ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார்.

அந்தப் பதிவில், இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கூட்டணி ஆட்சி வெற்றிகரமாக நடக்கும்போது, தமிழ்நாட்டில் மட்டும் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். கேரளா, ஜார்கண்ட், பீகார் போன்ற மாநிலங்களில் கட்சிகள் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதை சுட்டிக்காட்டிய அவர், தமிழக காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெறுவது மிகவும் அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

கூட்டணி ஆட்சி என்பது தமிழக மக்களுக்குப் பிடிக்காத ஒன்றல்ல, அது ஒரு தனித்துவமான போலி பிம்பம் மட்டுமே என்றும் அவர் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.