2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான காலத்திலே, முக்கிய அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளன. திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், நாம் தமிழர், பாமக, தேமுதிக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்டவை தேர்தலை நோக்கி கூட்டங்கள், ஆலோசனைகள், பிரசார வேலைகளை தீவிரமாக நடத்தி வருகின்றன.

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், நேற்று திருச்சியில் இருந்து மக்கள் சந்திப்பு பிரசாரத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார். இது தொடர்பாக கட்சி தரப்பில் தெரிவிக்கும்போது,  “டிசம்பர் மாதம் வரை, ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்துவார்” என கூறப்பட்டது.

விஜய் அடுத்த வாரம் (செப். 20) நாகை, திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். நாகை மாவட்டத்தில் உள்ள அவுரித் திடலில் கூட்டம் நடத்த அனுமதி கேட்டதாக தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதே நாளில் அதே இடத்தில் திமுக கூட்டம் நடைபெறுவதற்கான முன்பதிவு ஏற்கனவே இருந்ததால், போலீசார் அனுமதி மறுத்ததாக தகவல் வெளியாகியது.

இது பற்றி நாகை மாவட்ட எஸ்.பி. செல்வகுமார் விளக்கம் கொடுத்துள்ளார்.

> “தவெக தரப்பில் 20ம் தேதிக்கு மாற்று இடமாக 7 இடங்களை முன்வைத்துள்ளனர். அந்த மனுக்கள் தற்போது பரிசீலனையில் உள்ளன. பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து பாதிக்கப்படாத வகையில் ஆய்வு செய்யப்பட்ட பிறகு அனுமதி வழங்கப்படும்,” எனத் தெரிவித்தார்.