திரை இசை உலகில் 50 ஆண்டுகள் வெற்றிகரமாக கடந்ததையொட்டி இசைஞானி இளையராஜாவுக்கு தமிழக அரசின் சார்பில் வெகு சிறப்பாக பாராட்டு விழா நேற்று நடைபெற்றது.

“சிம்பொனி – சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜா – பொன்விழா ஆண்டு 50” என்ற தலைப்பில், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இடம்பெற்ற இந்த விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், பல்வேறு துறைச் செயலாளர்கள், அமைச்சர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பங்கேற்றனர்.

இந்த விழாவில் இசைஞானி இளையராஜா உரையாற்றியபோது, “சில நாட்களுக்கு முன்பு சூப்பர் ஸ்டார் என்னை அழைத்தார். ‘நாம செய்ததெல்லாம் மேடையில் சொல்லப்போகிறேன்’ என்றார். ‘பெல்பாட்டம் பேண்ட் போட்டுகிட்டு, கிராப் முடி விட்டுட்டு, பட்டையா வாட்ச் கட்டிக்கிட்டு…’ என தொடங்கினார்,” எனவே அவர் நகைச்சுவையுடன் பேசினார்.

மேலும்,  “ஸ்டூடியோவில் நாம்மூணு பேரும் உட்கார்ந்து பேசினோம். ரஜினி என்னிடம், ‘நியாபமிருக்கா? நீங்க அரை பாட்டில் பீர் குடிச்சிட்டு ஆடின ஆட்டம் இருக்கே! அதையெல்லாம் சொல்லப்போகிறேன்’ என்றார். சொல்லுங்கன்னா, எனக்கு கவலையில்லை என்றேன்,” என்றார் இளையராஜா. இதையடுத்து மேடையில் எழுந்து வந்த ரஜினிகாந்த்,

“’ஜானி’ படத்திற்கு இசையமைக்கும்போது நானும் மகேந்திரனும் குடிச்சோம். இளையராஜாவிடம், ‘நீங்களும் குடிக்கிறீர்களா?’ என்று கேட்டோம். அவர் ஓகே சொன்னார். அரை பாட்டில் பீர் குடிச்சிட்டு 3 மணி நைட்டுக்கு வரை ஆடிய ஆட்டம்…! அப்போ இருந்தவரு, இப்போ பெரிய காதலன்! அதான் இந்த லவ் பாடல்கள்… இன்னும் நிறைய இருக்கு, அடுத்தவாட்டி சொல்ல்றேன்,” எனக் கூறினார்.

அவரின் உரை முழு அரங்கத்தையும் சிரிப்பலையில் மூழ்கடித்தது. அதன்பின், இளையராஜா, “இல்லாததையும் ரஜினி அடிச்சிப் போறாரு!” என நகைச்சுவையாக பதிலளித்தார்.

மேலும் இளையராஜா 1,400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். தேசிய விருதுகள், மாநில விருதுகள், பத்ம விருதுகள் என பல பரிசுகள் பெற்றவர். தமிழ்த் திரைப்பட இசையில் “இசைஞானி” என அறியப்படும் இவருக்கு இவ்வருடம் 80-வது பிறந்த நாளும், 50-வது ஆண்டு பங்களிப்பும் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.