2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒரே மேடையில் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, திமுக அரசை கடுமையாகச் சாடினார். குறிப்பாக, தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாகவும், திமுக அரசு தமிழக இளைஞர்களை மாபியா கும்பலிடம் ஒப்படைத்துவிட்டதாகவும் குற்றம் சாட்டினார்.

வாரிசு அரசியல் மற்றும் தமிழ் கலாசாரத்திற்கு எதிரான போக்கு போன்றவற்றால் தமிழகத்தின் வளர்ச்சி பின்னோக்கிச் செல்வதாகவும் அவர் கவலை தெரிவித்தார்.

மேலும், ஜல்லிக்கட்டு தடைக்கு திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியே காரணம் என்று கூறிய பிரதமர், பாஜக அரசுதான் சட்டப் போராட்டங்களை நடத்தி அந்த உரிமையை மீட்டுக் கொடுத்ததாகக் குறிப்பிட்டார்.

மத்திய அரசின் திட்டங்களான குடிநீர் இணைப்பு மற்றும் கழிப்பறை வசதிகள் தமிழகத்தில் கோடிக்கணக்கான பெண்களுக்குப் பயன் அளித்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

பிரதமர் மோடியின் இந்த வருகையைத் தொடர்ந்து, ஜனவரி 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வரவுள்ளார்.

அடுத்தடுத்து தேசியத் தலைவர்கள் வருகை தருவதால் தமிழக அரசியல் களம் இப்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ளது.