
தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் சில பேருந்துகளில் தற்போது டிஜிட்டல் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திண்டுக்கல்லில் இருந்து பழனி நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து பொள்ளாச்சி செல்லும் வழித்தடத்தில் உள்ள ஒரு பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தப்பட்டது. அப்போது அங்கு காத்திருந்த பயணிகள் பேருந்தில் ஏற முயற்சி செய்தபோது பெயர் பலகை புரியாத மொழியில் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
அதாவது சீன மொழியில் பெயர் பலகை இருந்தது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்த நிலையில் பிறகு நடத்துனரிடம் பேருந்து எங்கே செல்லும் என்று கேட்டு ஏறினர். இது தொடர்பாக அரசு பேருந்து அதிகாரி ஒருவர் கூறுகையில் பெயர் பலகைகள் சீனாவில் தயாரிக்கப்படுவதால் முதலில் அங்குள்ள மொழியில் தான் எழுத்துக்கள் தோன்றும். இதனை நடத்துனர் மற்றும் ஓட்டுநர் தமிழ் மொழிக்கு மாற்ற வேண்டும். ஆனால் அவர்கள் மாற்றாமல் விட்டுள்ளனர் என்று கூறியுள்ளார். மேலும் சீன மொழியில் உள்ள பெயர் பலகை தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.